< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுமா?-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுமா?-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தினத்தந்தி
|
26 Sep 2022 8:21 PM GMT

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுமா?-நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு

தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், ஏழை கர்ப்பிணிகளுக்கு, சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகமும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனடைய கர்ப்பம் உறுதியான, 12 வாரங்களுக்குள் கிராம, நகர சுகாதார செவிலியர்களிடம் கர்ப்பிணிகள் பதிவு செய்து, ஆர்.சி.எச். அடையாள எண் அல்லது பிக்மி எண் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு மூன்றாம் மாத முடிவில் முதல் ஊட்டச்சத்து பெட்டகமும், 4-ம் மாத முடிவிலும் 2-ம் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பெட்டகத்தில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், குடல்புழு நீக்க மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை உள்ளிட்டவைகள் இருக்கும். ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு இந்த ஊட்டச்சத்து பெட்டகம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இதனால், ஏராளமான கர்ப்பிணிகள் பயன் அடைந்துவந்தனர்.

ஊட்டச்சத்து பெட்டகம்

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு முறை வழங்க வேண்டிய பெட்டகம், ஒருமுறை கூட வழங்கப்படாத நிலை இருப்பதாக கர்ப்பிணிகள் புலம்புகின்றனர். கிராமப்புற பகுதிகளில் கூட, பலருக்கு ஒருமுறையாவது ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த சில மாதங்களாக ஒரு பெட்டகம் கூட வழங்கப்பாடாத நிலை நீடிக்கிறது.

இதுகுறித்து கேட்டால் ஊட்டச்சத்து பெட்டகத்திற்கு பதிலாக தங்கள் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் இரண்டு தவணைகளாக வரவு வைக்கப்படும் என கூறுகின்றனர். ஆனால், இதுவரை யாருக்கும் வரவு வைக்கப்படவில்ைல. தற்போது பெட்டகங்கள் வராமல் இருப்பதால், பல இடங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. அரசிடம் இருந்து வந்த பின்பு சரிவர வழங்கப்படும்" சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து கர்ப்பிணிகள் கூறுகையில், ஏழை, எளிய கர்ப்பணிகளுக்கு மிகவும் பயன் உள்ள வகையில் வழங்கி வந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படாமல் இருக்கிறது. ஊட்டச்சத்து பெட்டகம் சரியான கால இடைவெளியில் கர்ப்பிணிகளுக்கு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். பிரசவம் முடிந்த பின்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி என்ன பயன் இருக்கும். எனவே சரியான நேரத்தில் அதனை வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகமும் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனையும் சரிவர வழங்க வேண்டும். இந்த 2 பெட்டகங்களும் வேறு சில மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, மதுரையிலும் இவை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்க வேண்டும் அல்லது பெட்டகத்திற்கான பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்