< Back
மாநில செய்திகள்
இந்த காலத்தில் மக்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைக்க முடியுமா? - அமைச்சர் முத்துசாமி
மாநில செய்திகள்

'இந்த காலத்தில் மக்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைக்க முடியுமா?' - அமைச்சர் முத்துசாமி

தினத்தந்தி
|
16 Jun 2024 4:36 PM IST

இந்த காலத்தில் ஆடு, மாடுகளைப் போல் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போல், இடைத்தேர்தலின்போது வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல் இந்த காலத்தில் ஆடு, மாடுகளைப் போல் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, ஆனால் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். இதை நாங்கள் திமிராக சொல்லவில்லை, அங்குள்ள மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பேசுகிறோம்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்