ஆம்னி பஸ்களை சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா..? ஐகோர்ட்டு கேள்வி
|வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையர், விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஆம்னி பஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
இதுதொடர்பான அந்த மனுவில், "கிளாம்பாக்கத்தில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் புதிய கட்டுப்பாடு 20 ஆண்டுகால நடைமுறைக்கு எதிரானது. 20 ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட்டன. 2003-ம் ஆண்டு கோயம்பேடு பஸ் நிலையம் திறக்கப்பட்ட போதும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற ஆணையரது உத்தரவினால், பஸ் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து ஆணையர் ஜனவரி 24-ந்தேதி உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவை 2 நாட்களுக்குள் அமலுக்கு கொண்டு வந்து விட்டார். அதனால், இந்த வழக்கு முடியும் வரை தனியார் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையம் வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய்நாராயண் வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ஏன் சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கக்கூடாது..? என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இதுகுறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.