< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

தினத்தந்தி
|
8 July 2024 6:12 AM IST

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே. மு. தி. க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி. மு. க. , பா. ம. க. , நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தி. மு. க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் பா. ம. க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா ஜனதா கூட்டணி தலைவர்களும் பா. ம. க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.

தி. மு. க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி. மு. க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்