பெரம்பலூர்
16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான முகாம்; பெரம்பலூரில் நாளை தொடங்குகிறது
|16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை (சனிக்கிழமை) தொடங்குவதால் மைதானம் தயார் நிலையில் உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே ராணுவத்தில் முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அதில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மைதானம் தயார் நிலையில் உள்ளது. மைதானத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ்கள் சர்பார்ப்பு பணிக்காக இணையதள வசதியுடன் கூடிய கணினி வசதிகள், மருத்துவ பரிசோதனைக்காக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதியவர்கள் வர தேவையில்லை
உடற்தகுதி தேர்வுகள் நடத்துவதற்கு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடற் தகுதித்தேர்வுகள் இரவிலும் நடக்கும் என்பதால் போதிய வெளிச்சத்திற்கு ஒளிரூட்டப்பட்ட விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் ராணுவ கட்டுப்பாட்டில் வந்து விட்டதே என்று கூறலாம். அந்த அளவுக்கு ராணுவ வீரர்கள் மைதானத்தில் முன்னேற்பாடுகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முகாம் ஏற்கனவே முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. புதியவர்களுக்கு அல்ல. எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் புதியவர்கள் வர தேவையில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.