< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 10 பேருக்கும், தண்டுவடம் பாதித்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

மருத்துவ பரிசோதனை

பின்னர் மாற்றுத்திறனாளிகளை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் வருகிற 5-ந் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நாள்தோறும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்