தர்மபுரி
தர்மபுரியில்ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
|தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையானது யுனிசெப், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறது. இதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பயிற்சி தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் தொடங்கி நடந்தது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகளை தூண்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் கவுதம், அப்துல் காதர் ஆகியோர் பயிற்சிகளை அளித்தனர். இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபிரகாஷ், உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வேலு மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.