தர்மபுரி
சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு 50 வீடுகள்முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வீடுகள்கள் திறப்பு விழா
தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். காணொலி காட்சியின் வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வீடுகளுக்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். பின்னர், சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அவர் பார்வையிட்டார்.
குடிநீர் இணைப்பு
சின்னாறு அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 50 வீடுகளுடன், மேல்நிலைநீர் தேக்கத்தொட்டியுடன் வீடுதோறும் குடிநீர் இணைப்புகள், மழைநீர் கால்வாய், தெருவிளக்குகள், வீடுகளுக்கு மின் இணைப்பு, 50 எண்ணிக்கையிலான சமுதாய உறிஞ்சு குழி மற்றும் தெருக்களுக்கு பேவர் பிளாக்குடன் கூடிய சாலை வசதி உள்ளிட்ட ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஷ்வரி, தாசில்தார்கள் ராஜா, வெண்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் நாராயணசாமி, சின்னாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் கலந்து கொண்டனர்.