தர்மபுரி
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு2-வது கட்டமாக விண்ணப்பம்வழங்கும் பணி தொடக்கம்பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. இதற்கான பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் கடந்த 24- ந்தேதி முதல் தொடங்கி வருகிற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 28- ந்தேதி வரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட முகாமில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வராமல் விடுபட்டு இருப்பவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாமல் விடுபட்ட நபர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமிற்கு வந்தால் போதுமானது. இடைப்பட்ட நாட்களில் முகாமிற்கு வர தேவையில்லை.
இந்த நிலையில் 2-ம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி முதல் தொடங்கி 16- ந்தேதி வரை நடைபெறுகிறது. ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார். இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2- ம் கட்ட முகாமிற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
பொதுமக்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.
சரிபார்க்கப்படும்
விண்ணப்பத்துடன் எந்த வித ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெறும். இந்த முகாமில் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓ.டி.பி. பெறப்படும்.
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டிருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டோக்கன் வினியோகம்
இதனுடைய தர்மபுரி நகரில் 15 ரேஷன் கடைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் நேரில் சென்று விண்ணப்பம் மற்றும் லோகங்கள் வழங்கினர். இதற்கான முகாம்கள் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நகரில் தேர்வு செய்யப்பட்ட 15 இடங்களில் நடைபெற உள்ளது.