கன்று குட்டிக்கு பிறந்தநாள்: கேக் வெட்டி பிரியாணி விருந்து வைத்து விவசாயி...!
|வேலூர் அருகே கன்று குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விவசாயி,பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் 1 வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர்.
இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர். இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர்.