< Back
மாநில செய்திகள்
கன்றுகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்க நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கன்று பாதுகாப்பு பெட்டகம் - 3 அமைச்சர்கள் வழங்கினர்
சென்னை
மாநில செய்திகள்

கன்றுகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்க நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கன்று பாதுகாப்பு பெட்டகம் - 3 அமைச்சர்கள் வழங்கினர்

தினத்தந்தி
|
7 Jan 2023 10:12 PM IST

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், பசு மடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டக திட்டத்தை 3 அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கோவில்களில் செயல்பட்டு வரும் பசுமடங்களிலுள்ள கன்றுகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கன்று பாதுகாப்பு பெட்டகம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் பசுமடத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தமிழகத்தில் இருக்கின்ற கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கன்று பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் கட்டுப்பாட்டிலுள்ள 121 பசுமடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெறும் கால்நடைகளை பராமரிக்க பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த பசுமடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பேணி காப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். இந்த நிதியின் மூலம் பசுமடங்கள் செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நங்கநல்லூர் பக்த ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பசுமடத்தில் 26 பசுக்கள் மற்றும் கன்றுகள் உள்ளன. கன்றுகளின் இறப்பை தடுக்கும் வகையிலும், சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் கன்று பாதுகாப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டகத்தில் மினரல் மிக்சர், கன்றுகளுக்கான பூச்சி மருந்து, ஓ.ஆர்.எஸ், தனிமங்கள் நிறைந்த உப்புக் கட்டி மற்றும் முதலுதவிப் பெட்டி போன்றவை உள்ளன. இந்த திட்டம் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 121 பசுமடங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர்கள் சுதர்சன், கே.ரேணுகா தேவி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்தி கல்வி மையத்தின் இயக்குனர் எஸ்.மீனாட்சி சுந்தரம், கோவில் பசுமடங்களின் ஆலோசகர் எஸ்.ஏ.அசோகன், கோவில் செயல் அலுவலர் அருட்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்