< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகேஆடுகளை கொன்ற மர்ம விலங்கை பிடிக்க கூண்டு  வனத்துறை சார்பில் வைக்கப்பட்டது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகேஆடுகளை கொன்ற மர்ம விலங்கை பிடிக்க கூண்டு வனத்துறை சார்பில் வைக்கப்பட்டது

தினத்தந்தி
|
19 Feb 2023 3:22 AM IST

தக்கலை அருகே ஆடுகளை கொன்ற மர்ம விலங்கை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

தக்கலை:

தக்கலை அருகே ஆடுகளை கொன்ற மர்ம விலங்கை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

2 ஆடுகளை கொன்றது

தக்கலை அருகே குடியிருப்புகள் நிறைந்த சரல்விளையை ஒட்டியுள்ள நரிச்சிக்கல், குழிவிளை, கொரங்கேற்றி ஆகிய இடங்களில் சிறுத்தை சுற்றி வந்ததாக ரப்பர் பால்வெட்டும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா உத்தரவின்பேரில் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் முட்டைக்காடு அருகே உள்ள கல்லாம் பொற்றை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஜோசப் சிங் (வயது 58) என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது, இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஒருவேளை அது சிறுத்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

மர்ம விலங்கு

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர், மர்ம விலங்கின் கால்தடங்கள் பதியாத நிலையில் ஆடுகளை கொன்றது எந்த விலங்கு என்பதை அவர்களால் உறுதிபடுத்த முடியவில்லை.

அதைத்தொடர்ந்து மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு, ஆடுகள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள தோட்டத்தில் கூண்டு வைத்து அதன் உள்ளே இறைச்சியும் வைக்கப்பட்டது. இதுபோல் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கருதப்படும் மலை பகுதிகளில் ஏற்கனவே 8 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் நேற்று மேலும் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு

அதை தொடர்ந்து இவ்விரு பகுதிகளையும் வனத்துறையினர் இரண்டு குழுக்களாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,

வனத்துறையினரின் துரித நடவடிக்கை மட்டுமின்றி மர்ம விலங்குகளை பிடிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்