திருச்சி
கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
|கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேபிள் டி.வி. மாத கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ள கட்டண சேனல்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் கைகளில் கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தை கண்டித்தும், மத்திய அரசு கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர், தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரை சந்தித்து சங்க நிர்வாகிகள் கொடுத்தனர்.