திருப்பூர்
கேபிள் ஒயர்கள், இன்டர்நெட் இணைப்புகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
|உடுமலை பகுதியில் தாறுமாறாக அமைக்கப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உடுமலை பகுதியில் தாறுமாறாக அமைக்கப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அனுமதி கடிதம்
உடுமலை நகராட்சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தெருக்கள் மற்றும் இதர தெருக்களில் தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக்காட்சி வடங்கள் நிறுவுதல் வரையறை விதிகள் 2000-ல் திருத்தப்பட்ட விதிகளின் படி நகர்புற உள்ளாட்சிகளுக்கு தளவாடகை ஒவ்வொரு வருடமும் கிலோமீட்டர் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களால் தொகை செலுத்தப்பட வேண்டும்.
மேலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் நகராட்சி மற்றும் இதர சாலைகளில் எடுத்துச் செல்வதற்கான தள வாடகை ஆண்டொன்றுக்கு கிலோமீட்டர் கணக்குப்படி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான கடிதத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்த்திருவிழா
இது சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 17 -ந் தேதி மாலை 4 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இதர இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய சர்வீஸ் ஏரியா விபரங்களுடன் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
நகராட்சிக்கு கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் அனுமதி பெறாத கேபிள் வடங்கள், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கேபிள் வடங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் கேபிள்கள் ஆகியவை முன் அறிவிப்பு ஏதும் இன்றி நகராட்சியால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதிக்கு மாறாக போக்குவரத்துக்கும், மழைநீர் செல்ல இடையூறாகவும் மற்றும் மின்கம்பங்களில் உரசும் நிலையில் நிறுவப்பட்டுள்ள கம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சாலை, தளி சாலை, சதாசிவம் சாலை, வடக்கு குட்டை தெரு மற்றும் நெல்லு கடை வீதி ஆகிய தெருக்களில் சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கம்பி வடங்களை தேர் பவனிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.