அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றம், துரைமுருகனுக்கு ஏமாற்றம்: தமிழிசை சவுந்தரராஜன்
|வாரிசு அரசியல் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமைச்சரவை மாற்றம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்றமாகவும், அண்ணன் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். யார் ஏற்றம் பெறப் போகிறார்கள், யார் ஏமாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கண்டிப்பாக எல்லோருக்கும் ஏற்றமாக இருக்காது. பலருக்கும் ஏமாற்றத்தைத் தரப்போகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் முறையில் இவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.
திமுக ஆட்சியில் என்கவுண்ட்டர்கள் தான் அதிகம் நடக்கிறது. திமுக பொறுப்பேற்ற பின்னர் 17 என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளன. யாரையோ காப்பாற்றுவதற்காக இதெல்லாம் நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கஞ்சா பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை. சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள்; ஆனால் அதை பின்பற்றமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.