முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் 23-ந் தேதி(இன்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் 23-ந் தேதி காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.