முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது...!
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.
பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.
தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளன.
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.