நாமக்கல்
ராசிபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிப்பார்களா?
|ராசிபுரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராசிபுரம்
குறுகலான சாலைகள்
சேலம், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது சேலத்திற்கு அடுத்தாற்போல் முதல் நகராட்சி என்ற அந்தஸ்தை ராசிபுரம் பெற்றிருந்தது. ராசிபுரம் தாலுகா முழுவதும் விவசாயம், பட்டு நெசவு, கைத்தறி நெசவு, கோழிப்பண்ணை தொழில் பிரதானமாக இருந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகள் ஒருங்கே அமையப்பெற்றுஉள்ளது.
தொழில் மேம்பாடு கண்டு இருந்தாலும் ராசிபுரம் நகரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அதற்கு காரணம் நகரத்தை சுற்றிலும் ஏரிகள் உள்ளன. இது தவிர தேசிய நெடுஞ்சாலைக்கு உள்ளே தள்ளி 5 கி.மீட்டர் தூரத்தில் ராசிபுரம் நகரம் அமைந்து உள்ளது. நகரம் முழுவதும் குறுகலான சாலைகள் உள்ள நிலையில், இந்த நகரத்தின் வழியாகத்தான் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளின் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள், வேன்கள் சென்று வருகின்றன. மேலும் 200-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பஸ்கள் தினசரி வந்து செல்கின்றன. கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற இடங்களில் இருந்து கனரக வாகனங்களும், ராசிபுரம் வழியாக வந்து சென்னைக்கு செல்கின்றன.
புறவழிச்சாலை
இதனால் கடந்த சில ஆண்டுகளாக ராசிபுரம் நகரத்தில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதுவும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு காரணம் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போவதுதான். சில நேரங்களில் போக்குவரத்து பிரிவு போலீசாராலும் கூட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருவது அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராசிபுரத்தில் ரிங் ரோடு, புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பலரது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பொன்குறிச்சி முதல் தண்ணீர்பந்தல்காடு வரை சுமார் 22 கி.மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ் சாலை) அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திட்டத்தை எளிய முறையில் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அப்பநாயக்கன்பட்டியில் இருந்து அணைப்பாளையம் வரை 6 கி.மீ. தூரத்திற்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு முதல் புறவழிச்சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. அணைப்பாளையம் பகுதியில் இருந்து பொன்குறிச்சி வரை உள்ள 5 கி.மீ. தூரத்திற்கு கடந்த 1 வருடமாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பநாயக்கன்பட்டியில் இருந்து தண்ணீர்பந்தல்காடு வரை உள்ள 11.2 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆயத்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு இருப்பதாகதெரிகிறது.
எனவே பல ஆண்டுகளாக ராசிபுரத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழக அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். புறவழிச்சாலை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் ராசிபுரம் நகரம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை போன்ற பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
கனவு திட்டம்
இது குறித்து ராசிபுரம் நகர மேம்பாட்டு குழு கவுரவ தலைவர் மோகன்ராஜ் கூறியதாவது:-
ராசிபுரம் நகரம் விரிவாக்கம் அடைந்து உள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் நகரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொன்குறிச்சியில் தொடங்கி நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு வரை புறவழிச்சாலை திட்டம் அமைப்பதற்காக 2006-ம் ஆண்டு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக அப்பநாயக்கன்பட்டியில் இருந்து பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் பொன்குறிச்சி வரை 6 கி.மீ. தூரத்திற்கு பணிகள் மெதுவாக நடந்து வருகிறது.
அப்பநாயக்கன்பட்டி முதல் தண்ணீர்பந்தல்காடு வரையிலான புறவழிச்சாலை திட்டத்திற்கு சர்வே எடுக்கப்பட்டதே தவிர பணிகள் தொடங்கப்படவில்லை. ராசிபுரம் தொகுதியில் துணை சபாநாயகர், சபாநாயகர், அமைச்சர்கள் வரை பல பதவியில் இருந்தும், தற்போது வரை புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் இந்த திட்டம் ராசிபுரம் தொகுதி மக்களின் கனவு திட்டமாகவே உள்ளது. எனவே புறவழிச்சாலையில் அப்பநாயக்கன்பட்டி முதல் தண்ணீர்பந்தல்காடு வரை பணிகளை விரைந்து தொடங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்வே பணிகள்
இது குறித்து வக்கீல் பாச்சல் சீனிவாசன் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் அப்பநாயக்கன்பட்டி முதல் அணைப்பாளையம் வரை புறவழிச்சாலை போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. ஆனால் அப்பநாயக்கன்பட்டி முதல் நாமகிரிப்பேட்டை வரையிலான புறவழிச்சாலைக்கு சர்வே பணிகள் முடிவடையாமல் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மீண்டும் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருமேயானால் ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.