< Back
மாநில செய்திகள்
கொட்டித்தீர்த்த மழையால்   கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொட்டித்தீர்த்த மழையால் கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு

தினத்தந்தி
|
31 Aug 2022 11:18 PM IST

பழனி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையினால், கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

மலைப்பாதையில் மண்சரிவு

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்த இந்த மழையால் பழனியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் சென்றன.

சண்முகநதியில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக, பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை ஏற்கனவே நிரம்பி இருந்ததால், அணைக்கு வரத்தான 2 ஆயிரத்து 441 கனஅடி தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேறியது.

65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரத்தான 2 ஆயிரத்து 780 கனஅடி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதேபோல் 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணை நிரம்பியதாலும் அணைக்கு வரத்தாகும் 450 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் சண்முகநதியில் கலப்பதால் சண்முகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி சென்றது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் சண்முகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்