< Back
மாநில செய்திகள்
நாப்கின் விற்பனை மூலம்தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம்:கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி
மாநில செய்திகள்

நாப்கின் விற்பனை மூலம்தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம்:கலெக்டர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
28 Dec 2022 12:15 AM IST

நாப்கின் விற்பனை மூலம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நாப்கின் விற்பனை

தேனியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த சானிடரி நாப்கின் விற்பனை மூலம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கால்நடை தீவனம் விற்பனை தொடக்க விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி இந்த திட்டங்களை தொடங்கி வைத்து, நாப்கின் மற்றும் கால்நடை தீவனம் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட 8 ஆயிரத்து 933 குழுக்களில், 96 ஆயிரத்து 425 குடும்பங்களில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் தரமான சானிடரி நாப்கின் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 151 பெண் குறுந்தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

தொழில் முனைவோர்கள்

இந்த தொழில் முனைவோர்கள் மாதம் ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். மேலும், 96 ஆயிரத்து 425 குடும்பங்களில் தன் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

மாட்டுத்தீவனம் விற்பனை திட்டமானது 125 விவசாய உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 2 ஆயிரத்து 500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

விழாவில், ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் ரூபன்சங்கர் ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, சமூக நல அலுவலர் சியாமளாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்