விளவங்கோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு
|பா.ஜ.க. சார்பில் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர்.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன. இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் இணைந்ததால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
விளவங்கோடு தொகுதிக்கு ராணி என்பவரை வேட்பாளராக அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. சார்பில் வி.எஸ். நந்தினி விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.