தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி இருக்கும் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி
|தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனதால் வாக்காளர்களை கவர களப்பணி ஆற்றி வருகிறோம். ஆளும் கட்சி 33 அமைச்சர்களும் முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். மனமா, பணமா என்றால் மனமே இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்ற மன உறுதி கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் இருக்கிறது.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கும்.
இரண்டு ஆண்டு கால தி.மு.க. மக்கள் விரோத அரசின் வேதனைகளை மூடி மறைக்க பணத்தை அவர்கள் வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை போல் மக்களை பட்டியில் அடைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதிகாரம் எல்லை மீறி செல்கிறது. அதிகாரிகள் வேண்டுமானால் அதிகாரத்திற்கு பயந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம்.
ஆனால் மக்கள் இதனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தேர்தலில் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நின்று சாமானிய தொண்டனான தென்னரசுக்கு வாக்களிப்பார்கள். அமைச்சர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் களத்தை விட்டு ஓடுவதற்கு அச்சாரமாக மின்சாரத்துறை அமைச்சர் ஓடுகிறார். நாளை தேர்தல் களத்தில் எல்லோரும் ஓடுகின்ற காட்சி விரைவில் வரும். பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சத்தை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.