இடைத்தேர்தலில் வெற்றி: முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா
|விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று, 3-ம் இடத்தைப் பிடித்தார். இருப்பினும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். விக்கிரவாண்டியில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.