< Back
மாநில செய்திகள்
செல்போன் செயலி மூலம் விளைபொருட்கள் வாங்கி  தேனி விவசாயியிடம் ரூ.96 ஆயிரம் மோசடி
தேனி
மாநில செய்திகள்

செல்போன் செயலி மூலம் விளைபொருட்கள் வாங்கி தேனி விவசாயியிடம் ரூ.96 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
15 July 2022 3:57 PM GMT

தேனி விவசாயியிடம் செல்போன் செயலி மூலம் விளை பொருட்களை வாங்கி ரூ.96 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்

செயலி மூலம் விற்பனை

தேனி அருகே தர்மாபுரி பசும்பொன் நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). விவசாயி. இவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக, விவசாய விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி வருகிறார். அந்த செயலி மூலம் நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய விளை பொருட்களை விற்பனை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது தோட்டத்தில் விளைந்த நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களை விற்பனை செய்வதற்காக அந்த செயலியில் விவரங்களை பதிவிட்டு இருந்தார்.

அதை பார்த்துவிட்டு கோவையில் இருந்து ஒருவர், தங்கவேல் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அவருடைய விளை பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்வதாகவும், விளை பொருட்கள் கையில் கிடைத்தவுடன் பணத்தை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அதை நம்பிய தங்கவேல், 1,292 கிலோ நிலக்கடலை, 20 கிலோ எள், 20 கிலோ உளுந்து என ரூ.95 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்களை கோவை செட்டிபாளையத்துக்கு பார்சல் சேவை மூலம் அனுப்பினார்.

ரூ.96 ஆயிரம் மோசடி

விளை பொருட்களை பெற்றுக் கொண்ட அந்த நபர் தங்கவேலுக்கு விளை பொருட்களுக்கான தொகை மற்றும் வண்டி வாடகை உள்பட ரூ.96 ஆயிரத்து 700-க்கான வங்கிக் காசோலையை அனுப்பி வைத்தார். அந்த காசோலையை அவர் வங்கியில் செலுத்திய போது காசோலைக்குரிய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று தெரியவந்தது. பின்னர், தன்னிடம் பொருட்களை வாங்கிய நபரின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதிலும் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் தன்னை ஏமாற்றிய நபர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தங்கவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த நபர் பேசிய செல்போன் எண்கள், காசோலை கொடுத்த வங்கிக் கணக்கு விவரங்களை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது, கோவை குனியமுத்தூரில் வசிக்கும் முகமது மாலிக் (55), காஜாமைதீன் (40) ஆகிய இருவரும் கூட்டுசேர்ந்து விளை பொருட்களை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து முகமது மாலிக், காஜாமைதீன் ஆகிய 2 பேரையும் தேனி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 15-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

செயலி மூலம் விவசாயிகளிடம் விளை பொருட்களை வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்ததோடு, அந்த விளை பொருட்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. கைதான முகமது மாலிக்கின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான். அவர் மீது திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரிடம் ஜவ்வரிசி கொள்முதல் செய்து பண மோசடி செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்