சென்னை
ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பனை 'கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம்' - சென்னையில் கைதான பீகார் வியாபாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்
|கஞ்சா சாக்லெட்டை ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பதால், அதிக லாபம் கிடைக்கிறது என்று சென்னையில் கைது செய்யப்பட்ட, பீகார் மாநில கஞ்சா வியாபாரி போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையில் சமீபகாலமாக கஞ்சா சாக்லெட் விற்பவர்கள் அதிக அளவில் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள வெங்கடேசன் 2-வது தெருவில் ஒரு வீட்டில் பெரிய அளவில் கஞ்சா சாக்லெட்டுகள் பதுக்கி வைத்துள்ளதாக, இன்ஸ்பெக்டர் வீராசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வீராசாமி போலீஸ் படையுடன் குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 38 கிலோ கஞ்சா சாக்லெட் பாக்கெட்டுகள் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கஸ்ரத்தூரி (வயது 28) என்பவர் கைது செய்யப் பட்டார்.
அவர் கஞ்சா சாக்லெட் வியாபாரம் செய்வது ஏன், என்பது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கஞ்சா வியாபாரத்தை விட, கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கிறது. பீகாரில் கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு தடை கிடையாது.
சாக்லெட்டில் கஞ்சா குறைந்த அளவுதான் சேர்க்கப்படுகிறது. பீகாரில் கஞ்சா சாக்லெட் தயாரிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளது.
ஒரு சாக்லெட் பீகாரில் ரூ.1-க்கு கிடைக்கும். அதை வாங்கி வந்து சென்னையில் ஒரு சாக்லெட் ரூ.40 வரை விற்போம். சில்லறை விலை ரூ.50 வரை உள்ளது. கஞ்சா சாக்லெட்டை வாங்கி அப்படியே எளிதில் சாப்பிட்டு விடலாம். இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள். பீடா கடைகளில் அதிக அளவில் இது ரகசியமாக விற்கப்படுகிறது. பீகாரில் இருந்து ரெயில் மூலம் கொண்டுவர எளிதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பீகாரில் கஞ்சா சாக்லெட் தயாரிக்க அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பீடா கடைக்காரர் சிக்கந்தர் என்பவரை இந்த வழக்கில் போலீசார் தேடி வருகிறார்கள்.
அயனாவரம் பஸ் டெப்போ அருகில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக பிரதீப்குமார் (29) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.