< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
7 Feb 2023 7:02 PM GMT

அரசு பள்ளிகளில் பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டாம்பூச்சிகள் அறிவோம் என்ற தலைப்பில் பட்டாம்பூச்சிகளை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பட்டாம்பூச்சிகள் பூமியில் தோன்றியது. ஒரு இடத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகமாக காணப்பட்டால் அங்கு இயற்கைச் சூழல் சரியாக அமைந்துள்ளது என்ற காரணத்தினால், பட்டாம்பூச்சிகள் ஒரு சிறந்த மதிப்பீட்டுக் குறியீடாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பட்டாம்பூச்சிகள் தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெற முக்கிய பங்காற்றி மனிதன் உண்ணும் உணவிற்கு பெரிதும் உதவுவதோடு, உணவுச் சங்கிலியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பு, தமிழ்நாட்டில் 328 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதை கண்டறிந்து பட்டியலாக சமீபத்தில் வெளியிட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நமது மாநில பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு, மதிப்பீடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, பட்டாம்பூச்சி பிரியர்களான மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக குன்னம் பகுதியில் உள்ள பேரளி, க. எறையூர், அருமடல், பீல்வாடி, சித்தளி, எழுமூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் இயற்கை ஆர்வலர் சுந்தர் பட்டாம்பூச்சிகள் தொடர்பான தகவல்களை மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இதில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்