திருவாரூர்
தேரை திருப்ப உதவும் முட்டுக்கட்டை தயாரிக்கும் பணி மும்முரம்
|திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்துக்கு 9 நாட்களே உள்ள நிலையில் தேரை திருப்ப உதவும் முட்டுக்கட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்துக்கு 9 நாட்களே உள்ள நிலையில் தேரை திருப்ப உதவும் முட்டுக்கட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது. தேரை இழுத்து செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை. தேரை இழுக்க உதவும் 4 வடங்கள் ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. இந்த கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
300 டன் எடை
அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்ட விழா பந்தக்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடந்தது. ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ளது.
முட்டுக்கட்டை
தற்போது ஆழித்தேரில் பனங்கம்புகளை கொண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆழித்தேரை திருப்புவதற்கு உதவும், முட்டுக்கட்டை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த முட்டுக்கட்டைக்கான கைப்பிடிகள் தயாா் செய்யும் பணி நடந்து வருகிறது. சுமார் 500 முட்டுக்கட்டைகள் தயார் செய்யப்பட உள்ளன. சிறிய தேரை காட்டிலும் பெரிய தேருக்கு தான் அதிக முட்டுக்கட்டைகள் தேவைப்படும். முட்டுக்கட்டைகள் புளிய மரத்தில் செய்யப்படும்.
வீதிகளில் திருப்புவதற்கு
இதுகுறித்து முட்டுக்கட்டை தயார் செய்யும் பணியாளர்கள் கூறியதாவது:-
தேரை இழுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சம்பிரதாயமான தேருக்கு ஸ்டியரிங் வீல் கிடையாது. சாலைகளில் சுற்றி அங்கும் இங்குமாக நகர்த்தி ஓட்டவேண்டும். ஆங்காங்கு நிறுத்த வேண்டும். பின் மீண்டும் சக்கரங்களை நகர்த்த வேண்டும். வீதிகளில் திருப்புவதற்கு உதவியாக முட்டுக்கட்டை பயன்படுகிறது.
சிரமம்
இதை உந்துகட்டை என்றும் சொல்வார்கள். தேரின் வெளிப்பக்கத்தில் இருந்தும், உள்பக்கத்தில் இருந்தும் முட்டுக்கட்டை போடுவார்கள். உள்ளிருந்து முட்டுக்கட்டை போடுபவரின் பணி மிகவும் சிரமமானது. சிறிது தவறானாலும் சக்கரத்தின் அடியில் சிக்கி கை நசுங்கிப்போகலாம். பெரிய தேராக இருந்தால் ஆளே நசுங்கி உயிரிழப்பு ஏற்படலாம்.
நின்றுகொண்டிருக்கும் தேரை சாதாரணமாக பிடித்து இழுத்து நகர்த்துவது கடினம். ஒரு முட்டுக்கட்டை 40 கிலோ எடையில் 2 அடி நீளம், 1 அடி அகலம், 1.5 அடி உயரத்தில் இருக்கும்.
தேரை நகர்த்துவதற்கு பொக்லின் எந்திரத்தை பயன்படுத்துகின்றனர். தேர் சக்கரத்தின் அடியில் கட்டையை கொடுப்பார்கள். அப்போது சக்கரம் முன்நோக்கி உருளும். அதற்கு பின்னர் தேரை இழுக்கும் இழுவையில் தேர் ஓடும்.
இவ்வாறு அவர் கூறினார்.