< Back
மாநில செய்திகள்
மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது

தினத்தந்தி
|
13 Dec 2022 9:27 AM IST

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் பெண்ணை கத்தியால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூர் டூமிங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா (வயது 37). இவர், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மெரினா கடற்கரை லூப் சாலை வழியாக ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ஆட்டோவை மறித்தனர்.

ரோஜாவிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தர மறுத்துவிட்டார். அப்போது அந்த நபர்கள் அவரை கத்தியால் வெட்டினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.2,200 பணத்தை வழிப்பறி செய்து தப்பினர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பினார். மற்றொருவர் மெரினா கடலை நோக்கி ஓடினார்.

அவரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்றனர். கடலில் பாய்ந்து தப்பி செல்ல முயன்ற அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், அயனாவரம் பில்கிங்டன் சாலையை சேர்ந்த சந்தோஷ்குமார் (22) என்பதும், அவர் மீது புளியந்தோப்பு போலீஸ்நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடியது அவரது கூட்டாளியான பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவை சேர்ந்த ராம்பிரசாத் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

அவர்களிடம் இருந்து 1 கத்தி மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்