தூத்துக்குடி
தூத்துக்குடி கடற்கரை சாலையில் பரபரப்பு;காதலனை தாக்கி விரட்டிவிட்டுஇளம்பெண் பாலியல் பலாத்காரம்
|தூத்துக்குடி கடற்கரை சாலையில் காதலனை தாக்கி விரட்டிவிட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் காதலனை தாக்கி விரட்டி விட்டு, இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கடற்கரையில் காதல் ஜோடி
தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது 21 வயது காதலியுடன் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடையின் கீழ் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இரவு 10.45 மணியளவில் அவர்கள் கடல்அலையை ரசித்தபடி பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.
அப்போது இருட்டு பகுதியில் நடந்து சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை வழிமறித்து மிரட்டினர். பின்னர் காதலனை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
பாலியல் பலாத்காரம்
அதன்பிறகு அந்த 2 பேரும் இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர்களில் ஒருவர், அந்த பெண்ணை மீண்டும் கடற்கரை சாலையில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் அந்த பெண் அங்கு நின்ற தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.
இன்ஸ்டாகிராம் மூலம்...
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் ெவளியானது.
அதாவது, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும், வாலிபரும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 4 மாதங்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 2 மாதமாக இரவு 10 மணிக்கு பணி முடிந்த பிறகு, கடற்கரை சாலை, ரோச் பூங்கா பகுதிகளில் அந்த பெண் தனது காதலனை சந்தித்து பேசி வந்தார். நேற்று முன்தினம் இரவும் அவ்வாறு வந்தபோது, காதலனை மர்மநபர்கள் தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
ஒருவர் சிக்கினார்
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான அவரது நண்பரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனதாகவும், அவர் கணவரை பிரிந்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தூத்துக்குடியில் காதலனை தாக்கி விரட்டி விட்டு, இளம்பெண்ணை கடத்தி சென்று 2 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.