கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
|கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகேயுள்ள காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் சுரேஷ். இவர் சொந்தமாக ஜூவல்லரி தொழில் செய்து வந்தார். இதனை தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். மேலும் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் வீட்டின் அவரது அறையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்த தொழிலதிபர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீடு முன்பு திரண்டு உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.