பெரம்பலூர்
தொழில் நிறுவனங்கள் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
|தொழில் நிறுவனங்கள் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
2020-21 மற்றும் 2021-22-ம் நிதி ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார இழப்பை சந்தித்த தொழில்முனைவோர்கள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அல்லது அதே தொழிலை புதிதாக ஆரம்பிக்கவும் அல்லது வேறு தொழிலை தொடங்கவும் ரூ.5 கோடி வரையிலான திட்டங்களுக்கு, எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 21 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு தொழிற்பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா ெதாற்றால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியானவர்கள் ஆகும். மூலதன மானியமாக ஆலை மற்றும் எந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும். 2022-23-ம் ஆண்டுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் இந்த திட்டத்தை மேற்கண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04328 225580, 224595 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.