தென்காசி
தொழில் தொடங்க மானியம்
|தொழில் தொடங்க 25 சதவீத மானியம்- தென்காசி கலெக்டர் ஆகாஷ் தகவல்
தென்காசி மாவட்டத்தில் 25 சதவீத மானியத்துடன் புதிய தொழில் தொடங்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட்ஸ் என்ற புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை இந்த திட்டத்தை செயல் படுத்தலாம். இத்திட்டத்தில் தொழில் முனைவோர் 5 சதவீத முதலீடு மட்டும் செய்தால் போதும். மீதி 95 சதவீத பணம் வங்கிகள் கடனாக வழங்கும். இந்த மொத்த பணத்தில் 25 சதவீதம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் மேன்மேலும் வளர்ச்சி அடைய இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதில் ரெடிமேடு ஆடைகள் தயாரித்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி, மரச்சாமான்கள் தயாரித்தல், பேக்கரி, மசால் பொருட்கள் உற்பத்தி, அரிசி ஆலை, பருப்பு ஆலை, மரச்செக்கு எண்ணெய், பால் பொருட்கள், மாட்டு தீவனம், கோழி தீவனம் தயாரித்தல், தேங்காய் நார் மற்றும் கயிறு உற்பத்தி, சாம்பல் செங்கல், ஹாலோ பிளாக், பேவர் பிளாக், டைல்ஸ் போன்ற உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சேவை தொழில்களான புதிய ஆஸ்பத்திரி அமைத்தல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், ஸ்கேன் சென்டர், பிசியோதெரபி சென்டர், பல் ஆஸ்பத்திரி, ரத்தப் பரிசோதனை நிலையம், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட், உலர் சலவையகம், மோட்டார் வாகனங்கள் பழுது நீக்கும் தொழில், வீல் அலைன்மென்ட், கார் வாஷிங், கான்கிரீட் மிக்சர் எந்திரம், போர்வெல் எந்திரம், ஜேசிபி கனரக வாகனங்கள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த தொடர்புக்கு குத்துக்கல் வலசையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.