தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
|தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை,
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். அத்துடன், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
"அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை, பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து இயங்கும். அதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும். இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது.
நாளை முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும். சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் புறப்படும் 300 அரசு விரைவு பேருந்துகளும், வார இறுதி நாட்களில் புறப்படும் 360 அரசு விரைவு பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.