திருப்பூர்
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
|திருப்பூர் குமார் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை.
திருப்பூர் மாநகரில் வெளி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவரும் வேலைநிமித்தமாக வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் போக்குவரத்துக்காக அரசு மற்றும் தனியார் பஸ்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் திருப்பூரில் பல இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லாமலும், பராமரிக்காமலும் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெயில், மழை நேரங்களில் அதிகமாக சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் தங்கள் கருத்துக்களை கூறியதாவது:-
சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தம்
ரகுநாதன், (போயம்பாளையம்):- திருப்பூர் சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை மோசமான நிலையில் உள்ளது. இங்கு அதிகமான பொதுமக்கள் கோபிச்செட்டிபாளையம், குன்னத்தூர், நம்பியூர் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு காத்திருக்கின்றனர். இங்கிருந்து நான் 8 வருடங்களாக பஸ்சில் சென்று வருகிறேன். இந்த பஸ் நிறுத்தம் அப்போதிலிருந்து அப்படியே தான் இருக்கிறது. குறிப்பாக மேற்கூரை பழுதடைந்து ஓட்டையாக காட்சியளிக்கிறது. மேலும் உட்காரும் நாற்காலிகள் சேதமடைந்து உள்ளது. இதனால் நிழற்குடை அமைக்கப்பட்ட திண்ணைகளில் அமர்ந்திருக்கின்றனர். மேலும் மழை, வெயில் காலங்களில் பயணிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அமர இடமில்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே இங்குள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
ராஜூ, (தொரவலூர்):- நான் 10 வருடங்களுக்கு மேலாக பஸ்சில் சென்று வருகிறேன். நிழற்குடை பராமரிக்கப்படாமல் இருப்பதால் மதியம் நேரம் பஸ் ஏற காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பஸ் வருவதற்கு அதிகம் நேரம் ஆவதால் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது.
அமுதா, (தோட்டத்துபாளையம்):-
பஸ்சுக்காக அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்கு வெளியிலே வெயிலில் நிற்கக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. பஸ்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து தள்ளி நிறுத்தப்படுகிறது. இதனால் பெண்கள் பஸ்சில் ஏற முடியாத நிலைமை ஏற்படுகிறது. வயதானவர்கள் அதிகம் சிரமம் அடைகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிழற்குடை அவசியம்
பொன்னம்பலம், (திருமுருகன்பூண்டி):-
திருப்பூர் குமார் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இங்கிருந்து கோவை, அவினாசி, புளியம்பட்டி, குன்னத்தூர் போன்ற இடங்களுக்கு பஸ்சில் செல்வதற்காக பஸ் ஏறுகின்றனர். அதனால் அதிகமான பயணிகள் இங்கே கடை, கோவிலுக்கு முன்பாக பஸ் ஏறுவதற்காக நிழலில் காத்திருக்கின்றனர். அந்தசமயத்தில் கடைகளுக்கு பொதுமக்களும், கோவிலுக்கு பக்தர்களும் வரும்போது அமர வழியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது அவசியம்.
திலகவதி, (ஊத்துக்குளி):-
திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை முன் பயணிகள் ஊத்துக்குளி, ஈரோடு, குன்னத்தூர், 15 வேலம்பாளையம் செல்லும் பஸ்சுக்காக அதிகமானோர் காத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் வாடுகிறார்கள். பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பஸ்கள் இங்கு நிற்பது இல்லை. எனவே பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பயணிகள் கோரிக்கை
இதுபோல் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்த பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்கவும், சிக்னல் பக்கத்தில் இருக்கும் பஸ் நிழற்குடையை மாற்றி அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.