தர்மபுரி
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புபயணிகள் நிழற்குடையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்விதிமீறலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
|தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களின் விதிமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களின் விதிமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியானது தர்மபுரி- சேலம் சாலையில் நகரின் மைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைகளை பெறுவதற்கு புற நோயாளிகளாக வந்து செல்கிறார்கள். இதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த பகுதியில் போக்குவரத்து வசதிக்காக மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் அருகே இருக்கையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடை அருகே டவுன் பஸ்கள் வந்து நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லவும் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிளாட்பாரம் மற்றும் நிழற்குடை அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்து கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பயணிகள் நிழற்குடையை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சாலை ஓரத்தில் நின்று டவுன் பஸ் களில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.
நிரந்தரமாக தடுக்க வேண்டும்
இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிழற்குடையின் முன் பகுதி முழுமையாக வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்ந்து இளைப்பாற முடியாமல் தொடர்ந்து சாலையோரத்தில் டவுன் பஸ்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் இந்த பகுதியில் கான்கிரீட் சாலையும் முறையான பராமரிப்பின்றி சேதம் அடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி இந்த நிழற்குடை முன்பு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள கான்கிரீட் சாலையை சீரமைத்து டவுன் பஸ்கள் நிழற்குடையின் அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.