பெரம்பலூர்
பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
|பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் கூட்டம்
ஆயுத பூஜை-விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை இன்று (சனிக்கிழமை) முதல் விடப்பட்டுள்ளதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அரியலூர் தற்காலிக பஸ் நிலையம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் ஆகியவற்றில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விடுதிகளில் தங்கியிருந்து படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று மாலை உடமைகளுடன் பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்களில் போட்டி போட்டு ஏறி சென்றனர். வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் சில பஸ்களில் படிக்கட்டில் பயணிகள் தொங்கியபடி பயணம் செய்ததை காணமுடிந்தது.
சிறப்பு பஸ்கள்
ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரையில் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே போன்று விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச்செல்ல வருகிற 24, 25-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அந்த நாட்களில் பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.