< Back
மாநில செய்திகள்
பஸ்கள் வராததால்  வெறிச்சோடிய எருமப்பட்டி பஸ் நிலையம்  பயணிகள் கடும் அவதி
நாமக்கல்
மாநில செய்திகள்

பஸ்கள் வராததால் வெறிச்சோடிய எருமப்பட்டி பஸ் நிலையம் பயணிகள் கடும் அவதி

தினத்தந்தி
|
29 Oct 2022 12:10 AM IST

பஸ்கள் வராததால் வெறிச்சோடிய எருமப்பட்டி பஸ் நிலையம் பயணிகள் கடும் அவதி

எருமப்பட்டி:

பஸ்கள் வராததால் எருமப்பட்டி பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பஸ் நிலையம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் 30 அரசு பஸ்கள், 28 தனியார் பஸ்கள் மற்றும் 5 டவுன் பஸ்கள் என 63 பஸ்கள் எருமப்பட்டியை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

போக்குவரத்திற்கு வசதியாக எருமப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன் பிறகு பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தாலும் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்துக்கு சென்று வருவதில்லை. இதனால் தற்போது பஸ் நிலையம் பயனற்று கிடப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

புறவழிச்சாலையில் செல்கின்றன

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பஸ்கள் எருமப்பட்டி பஸ் நிலையத்திற்குள் வருவதாகவும், பிற நேரங்களில் பெரும்பாலும் ஊருக்குள் வருவதில்லை எனவும் கூறுகின்றனர். இதன் காரணமாக பொன்னேரி பிரிவு என்ற இடத்திற்கு சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்சில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதிலும் சென்னை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே சென்று விடுகின்றன. இவ்வாறு செல்லும் பஸ்களில் பயணிக்க 2 கி.மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பதால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் பஸ் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதோடு ஊருக்குள் பஸ் வருமோ? வராதோ? என்ற சந்தேகத்தோடு மக்கள் பஸ் நிலையத்தில் காத்திருப்பதை காணமுடிகிறது.

சட்ட நடவடிக்கை

பெரும்பாலும் அதிகாலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடையும் நிலை நிலவுகிறது. அதேபோல் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரத்து இல்லாததால், அங்குள்ள கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டு உள்ளன. எனவே எருமப்பட்டியை கடந்து செல்லும் பஸ்கள் அனைத்தும், பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்லும் பஸ்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எருமப்பட்டியை சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார்:- எருமப்பட்டி பஸ் நிலையத்தில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. அதனால் பஸ் வராது என்று முடிவெடுத்து புறவழிச்சாலை வரை பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாமக்கல் மற்றும் துறையூர் செல்லும் பஸ்கள் எருமப்பட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியவுடன் சென்றுவிடுகின்றன. ஒரு சில நிமிடங்கள் கூட நிற்பதில்லை. குறைந்தது 5 நிமிடங்களாவது பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்திவைத்து பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எருமப்பட்டி பஸ் நிலையத்துக்குள் வராமல், புறவழிச் சாலையில் செல்லும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பஸ் ஊருக்குள் வராமல் செல்வது தடுக்கப்படும்.

நேரடி பஸ் போக்குவரத்து

இதுகுறித்து எருமப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் பழனியாண்டி:- சென்னை செல்லும் பஸ்கள் எருமப்பட்டி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. இதனால் ஊரில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரி பிரிவு சாலைக்கு சென்று சென்னைக்கு பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. சேந்தமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட எருமப்பட்டியில் இருந்து சேந்தமங்கலத்திற்கு என தனி பஸ் வசதி கிடையாது. அதேபோல் செவந்திபட்டியில் இருந்து எருமப்பட்டிக்கும் பஸ் வசதி இல்லை. இதனால் எருமப்பட்டியில் இருந்து சேந்தமங்கலம் மற்றும் செவிந்திப்பட்டி செல்ல நாமக்கல்லுக்கு முதலில் பஸ்சில் சென்று, பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சில் செல்ல வேண்டி உள்ளது. அதன் காரணமாக சுமார் 25 கி.மீட்டர் வரை தேவையற்ற பஸ் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே இத்தகைய சிரமங்களை போக்க சேந்தமங்கலம் மற்றும் செவிந்திப்பட்டிக்கு நேரடி பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அரியலூர், சென்னை செல்லும் பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்