நாமக்கல்
மளிகை பொருட்கள் சந்தைக்கு பெயர் பெற்ற பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
|மளிகை பொருட்கள் சந்தைக்கு பெயர் பெற்ற பேளுக்குறிச்சியில் சுகாதார வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சேந்தமங்கலம்:
மளிகை பொருட்கள் சந்தைக்கு பெயர் பெற்ற பேளுக்குறிச்சியில் சுகாதார வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பேளுக்குறிச்சி சந்தை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது பேளுக்குறிச்சி ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மளிகை பொருட்கள் விற்பனைக்கு என மிகப்பெரிய அளவில் பேளுக்குறிச்சியில் சந்தை அமைக்கப்படுவது வழக்கம். அதில் கொல்லிமலை மிளகு, சோம்பு, வெந்தயம், கிராம்பு, கசகசா, சீரகம் உள்பட பல்வேறு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இதை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ்கள், வாடகை வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்து 4 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி செல்வார்கள். இதனால் மாநில அளவில் புகழ்பெற்ற மளிகை பொருட்கள் சந்தையாக பேளுக்குறிச்சி சந்தை விளங்கி வருகிறது.
பஸ் நிலையம்
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பேளுக்குறிச்சி வழியாக நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் பஸ்களில் அன்றாட வேலைக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பேளுக்குறிச்சியில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி மற்றும் சேந்தமங்கலம் வழியாக நாமக்கல்லுக்கும், சிங்களாந்தபுரம் வழியாக ராசிபுரத்திற்கும், வெள்ளக்கல்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை வழியாக ஆத்தூருக்கும் செல்லும் பிரதான சாலைகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்லும் பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாத ஒன்றாக இருந்து வருகிறது. அங்கு வெயில் மற்றும் மழைக்காலங்களில் பஸ் பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் இல்லை என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
சுகாதார வளாகம்
மேலும் பஸ் நிலையம் இல்லாததால் பஸ் டிரைவர்கள் ஆங்காங்கே விருப்பத்திற்கு ஏற்ப பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் தங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றும், அதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி அனைத்து பகுதிகளுக்கும் பயணிக்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதோடு கூடுதல் வழித்தடங்களுக்கு பஸ் வசதி கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அகில பாரத அய்யப்பா சேவா சங்க நிர்வாகி பாலமுருகன் கூறியதாவது:-
பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். அவர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு இடமில்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு பேளுக்குறிச்சியில் சுகாதார வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் வழித்தடங்கள்
வியாபாரி நவக்கோடி கூறியதாவது:-
பேளுக்குறிச்சியில் சுமார் 1¾ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் கடைகளை கட்டி வாடகைக்குவிட்டால் ஊராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இல்லத்தரசி வள்ளியம்மாள் கூறியதாவது:-
பேளுக்குறிச்சி வழியாக நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இங்கிருந்து சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழனியப்பர் கோவிலுக்கு பஸ் வசதி இல்லை. பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் நிச்சயம் இது போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், கூடுதல் வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.