கடலூரில் மீண்டும் பஸ் சேவை தொடங்கியது..!
|கடலூரில் கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பஸ் சேவை நிறுத்தப்பட்டது.
கடலூர்,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 2-வது சுரங்கம் விரிவாக்கப்பணிக்காக வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் அழித்து, கையகப்படுத்தும் பணி நடந்தது.
இந்த சம்பவத்தை அறிந்ததும் மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடலூரில் கல்வீச்சு சம்பவத்தால் நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பிய நிலையில், இன்று காலையில் இருந்து பஸ் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.