சேலம்
6 கிராமங்களுக்கு மீண்டும் பஸ் இயக்கம்
|‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக 6 கிராமங்களுக்கு மீண்டும் பஸ் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடி:-
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக 6 கிராமங்களுக்கு மீண்டும் பஸ் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
'தினத்தந்தி'யில் செய்தி
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சியில் மாரியம்மன்புதூர், பறவைக்குட்டை, மேலூர் மற்றும் மேலக்காடு கிராமங்கள் உள்ளன. அதே பகுதியில் சந்திரபிள்ளைவலசு ஊராட்சியில் அரசன்குட்டை, சமத்துவபுரம் ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பஸ் வசதி இல்லாமல் தவித்து வந்தனர்.
பஸ் வசதி இல்லாததால் அந்த கிராம மக்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பெண் தருவது இல்லை என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக நேற்றைய 'தினத்தந்தி'யில் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
கிராம மக்கள் மகிழ்ச்சி
இதன் எதிரொலியாக, நேற்று காலை முதல் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் மேற்கண்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்டது. இதனால் 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்த பஸ்சில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பயணித்தனர். மேலும் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து வாழப்பாடி அரசு டவுன் பஸ் பணிமனை மேலாளர் நடராஜன் கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு கொேரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இயக்கப்படுகிறது. நேற்று முதல் தினமும் காலை 9 மணிக்கு பேளூரில் இருந்து சந்திரபிள்ளைவலசு, பள்ளத்தாதனூர், அரசன்குட்டை, சமத்துவபுரம், மாரியம்மன்புதூர், குமாரசாமியூர், அத்தனூர்பட்டி வழியாக வாழப்பாடிக்கும், மாலை 4.50 மணிக்கு வாழப்பாடியில் இருந்து அத்தனூர்பட்டி, குமாரசாமியூர், மாரியம்மன்புதூர், சமத்துவபுரம், அரசன்குட்டை, பள்ளத்தாதனூர் வழியாக பேளூருக்கும் இயக்கப்படும் என்றார்.