கடலூர்
சிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல்; 35 பேர் படுகாயம் அதிவேகமாக வந்து மோதியதாக பஸ் டிரைவர் மீது வழக்கு
|சிதம்பரம் அருகே அரசுபஸ், லாரி மோதியது. இதில் 35 பேர் படுகாயமடைந்தனர். இதில் அதிவேகமாக வந்து மோதியதாக பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 51 பேர் பயணித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு, கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பெரியபட்டு சிறிய பாலம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே, சிதம்பரத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
35 பேர் காயம்
இதில் பஸ்சில் பயணித்தவர்களில் டிரைவர் கணேசமூர்த்தி உள்பட 35 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே கணேசமூர்த்தி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பஸ் டிரைவர் மீது வழக்கு
விபத்து தொடர்பாக லாரி டிரைவரான பி.முட்லூர் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(36) என்பவர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில், ஆலப்பாக்கத்துக்கு லாரியை ஓட்டி சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து லாரியின் வலது புறத்தில் முன்பக்கமாக மோதிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் கணேசமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.