மலைப்பகுதி கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்
|மலைப்பகுதி கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
இதுவரை பேருந்து வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருப்பதையும் கணக்கிலே கொண்டு அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆலோசித்து இருக்கின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின் போது, தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள் விலையேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நானே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க செய்தேன். அந்த பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம், இதுபோன்ற பண்டிகை நாட்களின்போது அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கான நடவடிக்கைகளும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.