ராமநாதபுரம்
ஓ.கரிசல்குளம் கிராமத்துக்கு பஸ் வசதி
|ஓ.கரிசல்குளம் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
கமுதி,
கமுதி அருகே ஓ.கரிசல்குளம் கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் வகையில் புதிய பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர். அதன்படி ஓ.கரிசல்குளம் கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர காரைக்குடி அரசு போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று கமுதியில் இருந்து ஓ.கரிசல்குளம் கிராமத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி காலையிலும் மாலையிலும் புதிய பஸ் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், கிராமப் பெரியோர்கள் கலந்து கொண்டனர். புதிய பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கமுதி போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார், தி.மு.க. பிரமுகர் பாண்டி, பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.