கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பஸ் வசதி
|கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பஸ் வசதி செய்துதர வேண்டும் என தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை வைத்தார்.
தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசும்போது கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி கள்ளக்குறிச்சியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிறுவங்கூர் சமத்துபுரம் அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை உள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி வழியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் செல்கின்றனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு கள்ளக்குறிச்சியில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாததால் நோயாளிகள் சுமார் ரூ.300 வரை கொடுத்து ஆட்டோவில் சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வர பஸ் வசதி செய்து தர வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அரசு கலைக்கல்லூரி கட்டிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ளதால் அங்கும் மாணவர்கள் சென்று வர பஸ் வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பஸ் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.