கள்ளக்குறிச்சி
வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி
|வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாணாபுரம்
85 கிராமங்கள்
ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் தாலுகாவில் இருந்து 85 கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரம் தாலுகா தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிறது.
ஆனால் கிராமங்களில் இருந்து வாணாபுரம் தாலுகாவுக்கு சென்று வர போதிய பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகவும் எனவே வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாணாபுரத்திலிருந்து தாலுகாவுக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறினார்.
மூங்கில்துறைப்பட்டு கிராமங்கள்
இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் இயங்கும் நகர பஸ்களை வாணாபுரத்தை மையமாக கொண்டு மூங்கில்துறைப்பட்டு பகுதி கிராமங்கள், புதுப்பட்டு, லக்கிணாயகன்பட்டி கிராமங்களையும், முருக்கம்பாடி மேலந்தல் கிராமங்கள், ரிஷிவந்தியத்தை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகியவற்றை இணைத்து இயக்க வேண்டும். இதற்கு ஏதுவாக திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து தற்போது இயக்கப்படும் நகர பஸ்களை ஆய்வு செய்து, பஸ்களை பொதுமக்களுக்கு ஏற்றவாறு நேரம் மாற்றி இயக்குவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தாலுகா, மருத்துவக்கல்லூரிக்கு
மேலும் வாணாபுரத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கும், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வரவும், கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவமனை வழியாக வாணாபுரம், மணலூர்பேட்டை வரையிலும், மூங்கில்துறைப்பட்டு, வாணாபுரம், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக கள்ளக்குறிச்சிக்கும், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாணாபுரம், லக்கிநாயகன்பட்டிக்கும் பஸ்களை இயக்க உடனடியாக மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.