காஞ்சிபுரம்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் சாவு
|சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் காட்டுமயிலூர் தெற்கு தெருவில் வசித்து வந்தவர் கொளஞ்சி. இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் ஒரகடம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாரணாசியில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஒரகடம் அருகே சாலை வளைவில் சென்றபோது முன்னால் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஒரகடம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு அம்பேத்கர் தெருவில் வசித்து வந்த மோகன கண்ணன் (23) என்பவர் ஒரகடம் சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தபோது வேன் மோதி பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.