< Back
மாநில செய்திகள்
சாயத்தொழிற்சாலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து
திருப்பூர்
மாநில செய்திகள்

சாயத்தொழிற்சாலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
7 July 2023 10:02 PM IST

திருப்பூர் ஆண்டிபாளையத்தில் சாயத்தொழிற்சாலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் உயிர் தப்பினர்.

சாயத்தொழிற்சாலை

திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் பிராசஸ் சாயத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் ெதாழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது மின்சாரம் இல்லாததால் மின்சாரம் வரும் வரை தொழிலாளர்கள் காத்திருந்தனர். பின்னர் காலை 9 மணிக்கு மின்சாரம் வந்தது. அதை தொடர்ந்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீ பற்றியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னர் தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ மளமள வென்று தொழிற்சாலை முழுவதும் பரவியதால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாய்லர் நாசம்

இந்த தீ விபத்தில் பாய்லர் மட்டும் நாசமானதாகவும், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்