தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் தீக்காய சிகிச்சை மருந்துகள்
|தீபாவளி தினத்தன்று மிகவும் பாதுகாப்பாக திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி தினத்தன்று மிகவும் பாதுகாப்பாக திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டும். பட்டாசுகளை தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் வைக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றாத பருத்தி ஆடைகளை அணியலாம். பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் அவர்கள் மீது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.
பட்டாசுகளை மிக அருகே சென்று வெடிக்க வேண்டாம். பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையாக அருகிலேயே வாளியில் நீரை வைத்திருப்பது நல்லது. பட்டாசு வெடித்த பின்னர் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பட்டாசுகளை தூக்கிப்போட்டு வெடிக்கச் செய்யும் செயலில் ஈடுபடக்கூடாது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி உள்ளடங்கிய அரசு ஆஸ்பத்திரிகள் வரை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளூக்கோஸ் பாட்டில்கள் உள்பட தேவையான மருந்துப்பொருட்கள் தயார்நிலையில் இருக்கவேண்டும். தேவையான ரத்தம் இருப்பில் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட அறுவைசிகிச்சைகளுக்கான டாக்டர்களும் தயாராக இருக்கவேண்டும். விரும்பத்தகாத எந்த நிகழ்வுகள் நடந்தாலும் உடனடியாக அதுகுறித்து dphepi@nic.in என்ற இணையதள முகவரியில் மாநில அவரசர கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பவேண்டும். அதை சுகாதாரத்துறை துணை-இணை இயக்குனர்கள், அரசு ஆஸ்பத்திரி 'டீன்'கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.