திருவள்ளூர்
வேப்பம்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
|வேப்பம்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஆண்டோ குமார் (வயது 32). இவரது மனைவி ஜெனி ( 29). சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண்டோகுமார் புதிதாக கட்டியுள்ள இந்த வீட்டில் குடி புகுந்துள்ளார்.
இந்த நிலையில் உறவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை பார்ப்பதற்காக ஆண்டோகுமார் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு செவ்வாப்பேட்டை போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது போலீஸ்காரர் சுல்தான் ஒவ்வொரு பூட்டியுள்ள வீடுகளிலும் டார்ச் லைட் அடித்துக் கொண்டே சென்றபோது ஆண்டோ குமாரின் வீடு திறந்திருப்பதை கண்டார். இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வீட்டை பார்வையிட்டு ஆண்டோகுமாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். வீட்டில் நகை பணம் எதுவும் இல்லை என்று ஆண்டோகுமார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் ஊருக்கு சென்றுள்ள ஆண்டோகுமார் வீட்டுக்கு வந்த பிறகுதான் வேறு ஏதாவது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறதா என்ற விவரம் தெரிய வரும்.