< Back
மாநில செய்திகள்
கூடலூர் கிளன்வன்சில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நீலகிரி
மாநில செய்திகள்

கூடலூர் கிளன்வன்சில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
22 Sept 2023 1:00 AM IST

கூடலூரில் இருந்து கிளன்வன்ஸ் செல்லும் சாலை மிகவும் குண்டு குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து விடுகின்றனர்.

கூடலூர்

கூடலூரில் இருந்து கிளன்வன்ஸ் செல்லும் சாலை மிகவும் குண்டு குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து விடுகின்றனர்.

குண்டும் குழியுமான சாலை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தேயிலை எஸ்டேட்டுகளும், விவசாய நிலங்களும் உள்ளது, இதனால் தோட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் பெரும்பான்மையாக உள்ளனர். இது தவிர சந்தன மலை முருகன் கோவில் மற்றும் அங்கு உள்ள காட்சி முனை பகுதியும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.

மேலும் பேரூராட்சி மக்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காக தினமும் கூடலூருக்கு சென்று வருகின்றனர். இதனால் அரசு பஸ்களும், தனியார் ஜீப்புகளும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து சந்தன மலை கிளன்வன்ஸ் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுப்பிக்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

பேரூராட்சியில் உள்ள அனைத்து மக்களும் மருத்துவ வசதி, பல்வேறு பணிகள் உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூடலூருக்கு சென்று விட்டு மாலை அல்லது இரவில் வீடு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்தை நம்பி உள்ளனர். இதனால் சாலையில் போக்குவரத்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பல ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்